Social Icons

Pages

Tuesday, October 19, 2010

facebook

Facebookஇல் தவிர்க்க வேண்டியவை

Facebook, Twitter போன்ற சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களின்(Social Networks) ஆதிக்கம் மிகவும் அதிகமாகக் காணப்படும் காலமிது. Facebook, Twitter, Myspace, Freindster, Urbanchat, Black Planet, Hi 5என நூற்றுக்கணக்கான சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்கள் இன்று பாவனையில் உள்ளன.
இந்த சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அவற்றில் நாம் வழங்கும் தகவல்கள் மற்றும் அவற்றின் ஊடாகப் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் எமக்கே ஆபத்தாக அமைந்துவிடவும் கூடும். எனவே, எமக்கு ஆபத்தாக அமையும் எனக் கருதும் விடயங்களைக் கண்டறிந்து தவிர்த்தால் நல்லது தானே?
தனிப்பட்ட கருத்துப்பரிமாற்றம்
தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை Facebook Wall மூலம் பரிமாறுவதைத் தவிர்க்கவேண்டும். இவ்வாறு Wall இல் கருத்துக்களையோ அல்லது படங்களையோ பரிமாறிக் கொள்வதால் அவற்றை அனைவரும் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். இதுவே நமக்கு ஆபத்தாக அமைந்துவிடலாம். எனவே, கருத்துக்களையோ அல்லது படங்களையோ Wall மூலம் பகிர்ந்துகொள்ளாமல், அவற்றைத் தனிப்பட்ட Message களாகப் பரிமாறிக்கொள்ளலாம்.
திட்டங்களைப் பகிர்தல்
பிறந்தநாள் விழா, விருந்து போன்றவற்றுக்கான அழைப்புக்களை அனைவரும் பார்க்கக் கூடியவாறாக வெளியிடுவதைத் தவிர்க்கலாம். இதன்மூலம் நண்பர்களுக்கிடையில் மனக்கசப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
தொடர்புபட்ட வலைத்தளங்கள்
Facebook போன்ற சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களில் எமது ஏனைய வலைத்தளங்களையும் இணைத்திருப்போம். சிலவேளைகளில் இது எமது வேலைகளுக்கோ அல்லது எமது நற்பெயருக்கோ களங்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைந்துவிடும்.
உதாரணமாக, வேலைக்குக் கள்ளம்போட்டு விருந்தொன்றுக்குச் செல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஞாபக மறதியால் விருத்தில் எடுத்த ஒளிப்படமொன்றை ஃபேஸ் புக்கில் இணைத்து விட்டீர்களென்றால், உங்கள் நிறுவன அதிபரோ, மனேஜரோ அதனை உங்கள் Facebook கணக்கிலுள்ள பிறிதொரு இணையத்தள இணைப்பின் மூலம் பார்த்துவிட்டால் அதோ கதிதான்….!
தொழில்ரீதியான தகவல்கள்
புதிய தொழில் ஒன்றைத் தொடங்கப் போகின்றேன் அல்லது எனது நிறுவனத்தில் இவ்வாறான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்ற தகவல்களை Facebookல் வெளியிட்டால் போட்டியாளர்களை உஷாரடையச் செய்து உங்கள் திட்டத்திற்கும் உலைவைத்துவிடும். இவ்வாறான தகவல்களைப் பகிரங்கப் படுத்துவதைத் தவிர்க்கலாம்.
குடும்பத் தகவல்கள்
பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் படங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் அவர்களின் தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதும் சிலவேளை எமக்கு வில்லங்கத்தைத் தரலாம். உதாரணமாக, திருமணமான ஒருவர் “எனது கணவர் கொழும்பு சென்றுள்ளார். தனியாக இருப்பது கடினமாக உள்ளது” என தனது Facebookல் எழுதுவாராயின் அது அவருக்கே ஆபத்தைத் தேடிக்கொடுத்துவிடும். இவ்வாறான தகவல்களைப் பரிமாறுவதைத் தவிர்க்கலாம்.
வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள்
நூற்றுக்கணக்கானவர்கள் நாளாந்தம் பார்க்கக்கூடிய சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களில் எமது வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பகிரங்கப்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது. கொள்ளைக்காரர்களையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும் வெற்றிலை பாக்குத் தட்டம் வைத்து வரவேற்றதுபோல் இது ஆகிவிடும்.
தனிப்பட்ட நிதி விடயங்கள்
தனிப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் நிதி தொடர்புபட்ட விடயங்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்துகொள்வது தவிர்க்கப்படவேண்டும்.
கடவுச் சொற்ளை நண்பர்களுடன் பகிர்தல்
எமது கணக்குகளுக்கான கடவுச் சொற்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது.  உதாரணமாக, Facebook கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியொன்றை அவசரமாகப் பார்த்துக் கூறுமாறு இணையத் தொடர்புள்ள நண்பர் ஒருவரிடம் Facebookன் கடவுச் சொல்லை வழங்குவோமாயின் அது வில்லங்கத்தை விலைக்கு வாங்கியதுபோல் அமைந்துவிடலாம்.

Friday, October 15, 2010

வெளிநாட்டுப்பணம்

“இளம் சமுதாயம் பொருளாதார விருத்தியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் காலமிது”
“வரும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கைப்பற்றுங்கள். யுத்த காலங்களில் வேலைவாய்ப்பின்றியும், வருமானங்கள் இன்றியும் தவித்தபோது நாம் அங்கிருந்து உங்களுக்குக் கைகொடுத்தோம். இனி உங்கள் உழைப்பால் உயருங்கள்”
“அங்க என்ர பிள்ளையளை தனியறைக்குள்ள விட்டுப் பூட்டீட்டு நாலு மணத்தியாலம் உழைக்கிற 300 யூரோவைத் தான் இங்க அனுப்புறனான்………”
இந்த முறை நல்லூர்த் திருவிழா முன்னெப்போதும் இருந்திராதளவுக்குக் களைகட்டியிருந்தது.  நீண்ட காலத்துக்குப் பின்னர் பெருந்தொகைச் சனம்.  ஒவ்வொரு நாள் திருவிழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
திருவிழா களை கட்டினதுக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு யாழ்ப்பாணம் வந்திருந்த எமது புலம்பெயர் உறவுகளும் ஒரு காரணம். ஜுலை, ஓகஸ்ட் மாதங்கள் பெரும்பாலான புலம்பெயர் நாடுகளில் வேனிற்கால விடுமுறை. இங்கே நாட்டுச் சூழலும் மாறியிருக்கிறது. எல்லாம் சேர்த்து நல்லூர் திருவிழாவை களைகட்டச் செய்தது.
நீண்ட காலத்துக்குப் பின்னர் யாழ் வந்தவர்களின் மன உணர்வுகள் பரவசப்பட்டன.
“கொழும்பிலிருந்து இவ்வளவு ஈசியா யாழ்ப்பாணத்துக்கு ‘வானி’லை வருவம் எண்டு நினைச்சே இருக்கேல்ல….. இவ்வளவு கெதியா யாழ்ப்பாணம் இப்பிடி மாறும் எண்டு கனவிலையும் நினைக்கேல்லை….” என்கிறார் கனடா வாழ் புலம் பெயர் தமிழர் கிருபாகரன்- சியாமிளா.
1995ம் ஆண்டு யுத்த சூழல் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்கு சென்றவர், அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது கசூரினா பீச், நயீனாதீவு, நல்லூர் ஆலயம் என்று எல்லா இடமும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டே திரும்பினார்.
போக்குவரத்து, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும், யாழ் நகர்ப் புறத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் கூறும் அவர்,   “மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைப் பார்க்க சந்தோ~மாக இருக்கிறது” என்று சிலாகிக்கிறார்.
நிலைமைகள் பெருமளவு சீரான பின்னரும் யாழ்ப்பாணச் சூழ்நிலை தொடர்பாக பரவிய பல்வேறு வதந்திகளால் குழம்பியிருந்தவர்களுக்கு, நேரடி அனுபவம் வித்தியாசமாகவே இருந்தது.
“யாழ்ப்பாணத்தில வெள்ளைவானில் கடத்துறாங்கள்…. போறது கவனம் எண்டாங்கள். ஆனா இங்க வந்து பாத்தால் அப்படியில்லை……. கொள்ளைகள்தான் கூடவா இருக்குது……..” என்று கூறுகிறார் கனடா வாசியான ஆரூரான் ஞானசௌந்தரி.
கனடாவுக்குப் புலம்பெயர்ந்து 14 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் வந்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்னேரே தான் வர இருந்தபோதும், கடத்தல் பீதிகளால் பயந்துபோய் இருந்ததாகவும் கூறுகிறார் அவர்.
“ரவுனிலை பழையபடி கடைகளெல்லாம் ஓரளவு இயங்குது…….. இரவெல்லாம் கூட சன நடமாட்டமா இருக்குது…….” என்று மகிழ்ச்சி வெளியிட்டார் 1980ம் ஆண்டு ஜேர்மன் சென்றபின் முதல் தடவையாக இங்கு வந்திருந்த கனகரட்ணம் சண்முகரட்ணம்.
சனநடமாட்ட அதிகரிப்பும், வியாபார விருத்தியும், புதிய கம்பனிகளின் வரவும்; வேலையை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான வரப்பிரசாதம் என்று மகிழ்ந்த அவர், “இளம் சமுதாயம் பொருளாதார விருத்தியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் காலமிது” என்றார் ஆணித்தரமாக.
“வரும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கைப்பற்றுங்கள். யுத்த காலங்களில் வேலைவாய்ப்பின்றியும், வருமானங்கள் இன்றியும் தவித்தபோது நாம் அங்கிருந்து உங்களுக்குக் கைகொடுத்தோம். இனி உங்கள் உழைப்பால் உயருங்கள்” என்று இன்றைய சந்ததியினருக்கு ஆலோசனை சொல்கிறார் அவர்.
நெருக்கடியான காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாடுபட்டு உழைத்து இங்குள்ளவர்களுக்கு செய்த உதவிகள் இங்கே அதிகளவு விரயமாக்கப்படுவதாக வந்திருந்த பலரும் அங்கலாய்த்தார்கள்.
“இங்க உழைக்கிறது செலவுக்கே காணாது என்டீனம்……… இங்க வந்து பாத்தா……… முத்தம் கூட்டுறதுக்கும் வேலைக்காரி…. சந்தைக்கு போறது ஆட்டோவில என்டு எங்கட வீட்டுக் கூத்தைப் பார்த்தா தலை சுத்துது…….” என்று புளுங்குகிறார் ஸ்ரீஸ்கந்தராசா- ஜெயந்தி.
1992இல் திருமணத்துக்காக ஜேர்மனிக்கு சென்றவர், தாய் மண்ணையும், தன் உறவுகளையும் பார்;க்க வந்திருந்தபோது, தனது தங்கை வீட்டில் பணம் படும் பாட்டைப் பார்த்தே இப்படி வெதும்பினார்.
“தொலைக்காட்சி போடுவதே தங்கையின் மூத்த மகனின் காலைக்கடன். பார்ப்போர் இல்லாமலே அது ஓடிக்கொண்டிருக்கும். விடிந்தால் பொழுது பட்டால் செல்போனோடு தான் இளைய மகனின் பொழுது கழிகிறது. மாபிள் பதித்த ஹோலை யார் கூட்டுவது என்ற பிடுங்குப்பாட்டுக்குள் வேலைக்காரி முத்தம் கூட்டி முடித்துவிடுவாள். ஹீற்றரில் ரீ போட்டு பாண் வேண்டி மிக்சியில் சம்பல் அரைப்பதற்கே தங்கை அலுத்துக்கொள்கிறாள்” என்று பாடுபட்டு உழைத்து அனுப்பும் பணம் கரைந்துபோகும் விதத்தைப் பார்த்து அங்கலாய்த்தார் அவர்.
“அங்க என்ர பிள்ளையளை தனியறைக்குள்ள விட்டுப் ப+ட்டீட்டு நாலு மணத்தியாலம் உழைக்கிற 300 யூரோவைத் தான் இங்க அனுப்புறனான்………”என்று காசுழைக்கத் தான் படும் பாட்டை விபரிக்கிறார் அவர்.
300 யூரோ என்றால் இங்கே கிட்டத்தட்ட 45 000 ரூபா கிடைக்கும். இதுவே ஸ்ரேலிங் பவுண் என்றால் அண்ணளவாக 55 000 ரூபாவும், கனடா டொலர் என்றால் சுமார் 30 000 ரூபாவும் கிடைக்கும். இவ்வாறு உண்டியல் மூலம் இங்குள்ளவர் கைசேரும் பணம் பெருமளவுக்கு இப்படித்தான் இங்கே கரைந்து போகிறது.
“மாதா மாதம் உடல் உழைப்பின்றி மேலதிக வருமானமாய் ‘சும்மா’ கிடைப்பதால் உழைப்பின் பெறுமதி இங்குள்ளவர்களுக்குத் தெரியவதில்லை. ஆடம்பரமான சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்கள், பிறந்தநாள் வைபவங்கள், கோயில் திருவிழாக்கள் என்று அதைக் கரைத்துவிடுகின்றனர்” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத உள்ள+ர்வாசியொருவர்.
காலை எழுந்து மனைவி வேலைக்குச் செல்கிறாள். கணவனுக்கு இரவிலும் இரண்டாவது வேலை. இங்குள்ள தமது உறவுகளுக்கு உதவுவதற்காக இப்படி தமது குடும்ப வாழ்க்கையையே பரஸ்பர அன்பும் ஆதரவுமின்றி நகர்த்துகின்றார்கள் புலம்பெயர் மக்கள். இதனால், குடும்ப நிம்மதியையும், அன்பையும்கூட அவர்கள் இழந்துவிடுகிறார்கள்.
“ஒரு நாளைக்கு நாலு மணத்தியாலம் மட்டும் நித்திரை கொண்டு, நேரம், காலம் பார்க்காமல் பனிக்குளித்து உழைத்து அனுப்பும் பணம் இது என்ற உணர்வு அதை இங்கே கரைப்பவர்களுக்குத் தெரிகிறதா?” என்கிறார் ஒரு புலம்பெயர் வாசி.
இந்தப் பணத்தை அவமே கரைத்துவிடாமல், கல்வி உபகரணங்கள் வாங்கவோ, பிரயோசனமான முதலீடுகளைச் செய்யவோ அதைப் பயன்படுத்தினால், காலம் முழுக்க வெளிநாட்டு உழைப்பை நம்பியிராமல் சுயமாக உழைத்து, கௌரவமாக வாழ்ந்திடலாம்.
சிறியதொரு கைத்தொழில் முயற்சி, ஒரு கடையை நடத்தலாம். அல்லது ஒரு முச்சக்கரவண்டியை வாங்கி ஓடி உழைக்கலாம்.
1980 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த சுமார் 5,000 கைத்தொழில் முயற்சிகளில் சுமார் 600 வரையில்தான் இன்று செயற்படுவதாக முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் அண்மையில் கூறியிருந்தார். இவ்வாறு நின்றுபோன ஆயிரக்கணக்கான கைத்தொழில்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்கு இந்த வெளிநாட்டுப் பணத்தை முதலீடு செய்தால், நாமும் வருமானமீட்டி, இன்னும் பலருக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்கி, படிப்படியாக ஒரு தொழிலதிபராகவே உயர்ந்துவிடலாம்.
உலகெங்கும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்களின் வருமானத்தையும் சேர்த்தால், இலங்கைத் தமிழர்களின் தலா வருமானம் ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள். இழந்துபோன எல்லாவற்றுக்கும் அப்பால், கிடைத்திருக்கும் இந்தப் ‘பொன்’னான வாய்ப்பை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இளைஞர்களாகிய நாம் சரியாகப் பயன்படுத்தினால் பொருளாதார ரீதியாக நமது மண்ணை சிறப்பாக உயர்த்திடலாம்.
இவ்வாறு பொருளாதார ரீதியாக நாம் உயர்ந்துவிட்டோமென்றால், ஊருக்குள்ளேயே அடைந்து கிடக்காமல், நாமே வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பரந்த உலக அறிவையும், அனுபவத்தையும் பெற்றுவிடலாம். இன்று வெளிநாட்டிலிருந்து வந்து நம்மை பார்க்கும் உறவுகளை அப்படியே ஒரு சுற்றுச் சென்று பார்த்துத் திரும்பவும் முடியும்.
எங்களுடைய பலத்தையும், வளத்தையும் சரியாகக் கணிக்கத் தெரியாதவர்கள்  இதெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லக்கூடும். அவர்களைப் பொருட்படுத்தாமல், இப்போதே பணத்தை மீதப்படுத்தி, முதலீடு செய்து, உழைத்து வருமானமீட்டி, குடும்பத்தோடு வெளிநாட்டுச் சுற்றுலா ஒன்றுக்கு தாயாராகுங்கள்……..!
என்ன…? தயார்தானே…?

Wednesday, October 13, 2010

கவிதை

இப்படிக்கு நான்…!

என் கண்கள் காட்டிக் கொடுத்த
உண்மைகளை விட என் காதுகள்
கேட்ட பொய்களே அதிகம்.
*
எனது கல்லை எப்போதும்
இரண்டு விடயங்களை
நோக்கியே வீசுகிறேன்
தவறினால்
ஒன்றாவது விழும்
என்பதால்
*
இந்த உலகத்துக்கு நான்
ஒரு புத்தகமாகவாவது
இல்லாமல் இறந்தாலும்
ஒரு தத்துவத்தையாவது
விட்டுத்தான் இறப்பேன்.
*
நான் எதையும்
சம்பாதிக்கவில்லை
என்னைத் தவிர எனக்கு.
*
நான் எதையும் இழக்கத் தயார்
இழப்பதைவிட பெறுவது பெறுமதி
வாய்ந்ததாக இருக்குமானால்.
*
என்னை விளங்கப்படுத்த
கரும்பலகை தேவையில்லை
ஒரு காரணம் போதும்.
*
நான் வற்றிப் போனபின் தான்
தெரிந்து கொண்டேன் என்னை
எத்தனைபேர் குடி நீராகா
பாவித்தார்கள் என்பதை
*
என்னிடம் இருப்பதே அதிகம்
என்பதை தெரிந்து கொண்டபின் தான்
இறைவனை நான் திட்டுவதில்லை.
*
என் இறந்த காலம் என்ற கண்ணாடியே
நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல்
நடக்க உதவி செய்கிறது.
*
இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.
*
ஆசைபட்டால் கடன்பட்டாவது
அனுபவிப்பேன்.
*
பிரைச்சனைகள் என்னை குளப்பும்
போதுதான் நான் குளம்பாமல்
இருப்பேன்
*
சின்ன வாய்ப்புகளையும்
தவறவிட மாட்டேன்
அனாலும் பெரிய
வாய்புகளுக்காய்
காத்திருக்கிறேன்
*
நான் தெய்வம் இருக்கு என்பதை
நம்புகிறேன் அனால் மததின்
மூடனம்பிக்கையை பின்பற்றுவதில்லை.
*
என் விரல்கள் உள்ளவரை மோதிரங்கள்
தொலைந்ததற்காய் கவலைப்படமாட்டேன்.
*
உனக்கு நான் உதாரணமல்ல
உனக்கு நான் ஒரு தத்துவம்
*
தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்
*
கடவுள் இருக்கிறார இல்லையா என்று
சந்தேகப்பட்டு வாழ்வதைவிட
கடவுள் இருக்கிறார் என்று
நம்பி வாழ்வதே மிகவும் சிறந்தது.
*
என் வாழ்வில் நான் ஒரு போதும்
விழவே மாட்டேன் என்பதை  நம்பவில்லை
எத்தனை தடவை விழுந்தாலும்
எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்
*
வாழும்வரை
நிழல் தருவேன்
இறந்தால்
என் காதல்
துணைவியே
என்னை
விறகாக்கி
உன் பசி தீர்ப்பேன்