தொலைபேசி என்றாலே புதினமாகப் பார்த்த காலம் போய், இன்று ஆளுக்கு ஒன்று என்று ஒவ்வொரு வீட்டிலும் எல்லோருடைய கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒரு கைபேசி போதாதென்று, ஒன்றுக்கு மேற்பட்ட சேவை வழங்குநர்களின் இலக்கங்களைப் பயன்படுத்தக்கூடிய Dual Sim வசதியுடைய கைபேசிகளும் பாவனைக்கு வந்துவிட்டன.ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில் சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயங்கக்கூடியதாக இதன் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இரண்டிலும் அழைப்புக்கள் வந்தாலும் மாற்றி மாற்றிப் பேசிக்கொள்ளலாம். ஒருவேளை கைபேசியை எங்காவது தொலைத்துவிட்டீர்களென்றால் அதனைத் தேடிக் கண்டறியும் MobileTracker தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது.
எஃப்.எம். றேடியோ, எம்.பி.3 பிளேயர், கமரா என்று, டிஜிடல் தொழில்நுட்பத்தின் அத்தனை சாத்தியங்களையும் உள்ளங்கைக்குள் சுருக்கிக்கொண்டிருக்கும் கைபேசிகள், இன்னுமின்னும் பல சாத்தியங்களையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய கணினியையே தன்னுள் அடக்கியுள்ள Smart Phones உம் இப்போது அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது.
மிக அண்மைக்காலம் வரையில் தொலைபேசிப் பாவனையே அரிதாயிருந்த யாழ்ப்பாணத்துக்கு உலக சந்தையில் மிகப் பிந்திய இவ்வாறான கைபேசி வகைகள் எல்லாம் இப்போது தாராளமாகக் கிடைக்கிறது. Nokia, Motorola, Samsung, sony Erricson, Vodafon என்று எல்லா வகையான கைபேசி வகைகளும் இங்கே பெருகிக் கிடக்கின்றன.இந்தத் தனியார் தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கிடையிலான போட்டி காரணமாக, பாவனையாளர்களுக்குக் குஷிதான். அழைப்புக் கட்டணங்கள் வீழ்ச்சியடைந்துவரும் அதேவேளை, GPRS, Broadband,Wifi வசதிகளும் இதனால், மிகக் குறைந்த கட்டணங்களில் பாவனையாளர் கைசேர்கிறது.
Airtel நிறுவனம் மொபைல் தொலைக்காட்சி சேவையையும் விரைவில் வழங்கவிருப்பதாகவும் ஒரு கதை அரசல்புரசலாக இப்போது வெளியாகியிருக்கிறது,
கைபேசிகளின் இந்தப் பரவலால் அது இப்போது மனிதர்களின் ஆறாவது விரலாகிவிட்டது.
வரமா? சாபமா?
இந்தளவுக்கு எம்மிடையே பரவலாகியிருக்கும் கைபேசிப் பாவனை, உலகளவில் சாத்தியமாகியிருக்கும் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் எம் கைசேர்த்திருப்பது ஒரு வரமேயாயினும், கூடவே கைபேசிப் பாவனை புதிய சில சிக்கல்களையும் கொண்டுவந்துள்ளது. நீண்டகாலமாக இல்லாதிருந்து இப்போது திடீரெனப் பரவியிருக்கும் இந்த மொபைல் மேனியா, சிறு குழந்தைகள் முதல் பாட்டன் பாட்டியர் வரையில் அனைவரது கைகளிலும் தவழ்கிறது.இவ்வாறு, நவீன தொழில்நுட்பம் நமக்கு வரமளித்திருக்கும் பல சாத்தியங்களையும் சாபங்களாக்காமல் சரிவரப் பயன்படுத்துவதே நமக்கும், பிறருக்கும் – இந்தத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தவர்களுக்கும் – செய்யும் கைங்கரியமாகும்

